Home2019-05-15T11:13:28+00:00

Globe Iconகுடிவரவாளர்கள் மற்றும் புதிய வரவாளர்களுக்கான ஹெபரைற்றிஸ் C தகவல்கள்

உங்கள் மொழியில் ஹெபரைற்றிஸ் C பற்றி மேலும் அறியவும்

இந்த வலைத்தளமானது, தற்போது வரைக்குமான புதிதாக வரும் அடிப்படை ஹெபரைற்றிஸ் C(Hepatitis C)பற்றிய தகவலை, ஒன்ராறியோவின் மிக அதிகளவிலான புலம்பெயர்ந்த சமூகங்களில் பேசப்படும் மொழிகளில் வழங்குகிறது.

கனடாவின் குடிவரவாளர்கள் மற்றும் புதிய வரவாளர்கள் மத்தியில் ஹெபரைற்றிஸ் C

1 in 3 People Icon

கனடாவில் ஹெபரைற்றிஸ் C நோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் பிறநாட்டில் பிறந்துள்ளவர், பெரும்பாலானவர்கள் ஹெபரைற்றிஸ் C உயர்ந்த விகிதத்தில் உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள். கனடாவின் பொது மக்களில் இருப்பதை விடவும் ஹெபரைற்றிஸ் C குடியேறிய சில குழுக்களில் சர்வ சாதாரணமானது. இதனால்தான் ஹெபரைற்றிஸ் C பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்வதும் பரிசோதனை செய்வதும் மிகவும் முக்கியம்.

Orange Person with Liver Icon

ஹெபரைற்றிஸ் C உம் கல்லீைலும்

ஹெபரைற்றிஸ் C என்பது கல்லீரலைப் பாதிக்கின்ற ஒரு வைரஸ் ஆகும்.

ஹெபரைற்றிஸ் C என்பது ஹெபரைற்றிஸ் C வைரசால் ஏற்படுத்தப்படும் ஒரு கல்லீரல் நோயாகும். வைரஸ் இரத்த ஓட்டத்தில் நுழையும் போது அது கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது, அங்கு அது கல்லீரல் கலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி  அத்துடன் அதன் பிரதிகளையும் உருவாக்கத் தொடங்குகிறது.

சுமார் 25% மக்களில் தன்னிச்சையாகச் சில மாதங்களுக்குள் தாமாகவே வைரஸ்கள் அழிக்கின்றன. 75% மக்களில் இந்த வைரஸ்கள் தாமாகவே அழியாமல்  நீண்டகாலத் தொற்றுநோயை விருத்தி செய்யும் நிலையை உண்டாக்குகின்றன. இந்த வைரஸ் கல்லீரல் உயிர்க்கலங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் பெருகுகிறது,  ஆனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதை எதிர்த்துப் போராட முயற்சிக்கிறது. இது கல்லீரலில் வீக்கம் மற்றும் காயம் ஏற்பட வழிவகுக்கிறது. காலப்போக்கில்  இந்தக் காயம் ஃபைப்ரோசிஸ்(fibrosis) என்றழைக்கப்படும் வடுத் திசுக்களுக்கு வழிவகுக்கிறது.

பெரும்பாலான மக்களுக்குக் கல்லீரல் காயம் படிப்படியாக ஏற்படுகிறது. கல்லீரலை வைரஸ் இன்னமும் காயப்படுத்திக் கொண்டிருக்கின்ற போதிலும், மக்கள் உடல்நிலை சரியில்லாமல் போகாமல் 20 முதல் 30 ஆண்டுகள் வரை அல்லது அதற்கும் அதிகமாக ஹெபரைற்றிஸ் C வைரஸ் உடன் வாழ முடியும். காலப்போக்கில், ஒரு நபர் கடுமையான வடு மற்றும் கடினப்படுதலை கல்லீரலில் உருவாக்க முடியும். இது கல்லீரல் இழைநார் வளர்ச்சி (cirrhosis) என அழைக்கப்படுகிறது. இழைநார் வளர்ச்சி கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு அல்லது மரணம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.

ஹெபரைற்றிஸ் C ற்கு மிகவும் பயனுள்ளதான சிகிச்சை உள்ளது. அத்துடன் அது   கிட்டத்தட்ட அனைவரையும் குணமாக்குகிறது.

கல்லீரல்

கல்லீரல் ஒரு முக்கியமான உறுப்பு. அது தொற்றுகளை எதிர்த்தல், நச்சுகள் (விசங்கள்) மற்றும் மருந்துகளை முறித்தல், உணவு சமிபாடடைதல் போன்ற பலவற்றில் உடலுக்கு உதவுகிறது.

கல்லீரல் மிகவும் முக்கியமானது ஏனெனில் அது:

  • உடலில் புகும் இரசாயனங்கள் மற்றும் பிற பொருட்களை வடிகட்டுகிறது
  • சமிபாட்டில் உதவுகிறது
  • உங்கள் இரத்தம் மற்றும் பல புரதங்களின் உற்பத்திக்கு உதவுகிறது

கல்லீரல் மிகவும் கட்டுறுதியானது அத்துடன் அநேகமாகத் தானாகவே குணமாகக் கூடியது. இருப்பினும், வைரஸ்கள், மதுபானம், இரசாயனங்கள் மற்றும் சில மருந்துகள் காலப்போக்கில் உங்கள் கல்லீரலை நிரந்தரமாகச் சேதப்படுத்தி அதன் செயல்படும் தன்மையைப் பாதிக்கும்.

உங்கள் கல்லீரல் இல்லாமல் உங்களால் வாழ முடியாது.

Pink Pill With Question Mark Icon

ஹெபரைற்றிஸ் C கடத்தல்

ஹெபரைற்றிஸ் C இரத்தத்திலிருந்து இரத்தத்திற்குக் கடத்தப்படுகிறது.

ஹெபரைற்றிஸ் C சாதாரணத் தொடர்பு மூலம் அல்லது வைரஸ் கொண்ட ஒருவரைக் கட்டியணைத்தல், முத்தம் கொடுத்தல் அல்லது தொடுதல் மூலம் பரவுவதுமில்லை அல்லாது மருத்துவ நடைமுறைகள் அல்லது மருந்து பாவனையில் புதிய அல்லது ஒழுங்காகக் கிருமிநீக்கம் செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தினால் அது பரவுவதுமில்லை. தோல் அல்லது உடலில் உள்ள மற்ற பாதுகாப்பு அடுக்குகளில் உள்ள இடைவெளிகள் அல்லது கிழிவுகள் மூலம் வைரஸ் இரத்தத்திற்குள் செல்கிறது. ஹெபரைற்றிஸ் C ஒரு வலிமையான வைரஸ் – இதனால் உடலுக்கு வெளியே பல நாட்களுக்கு வாழ முடியும். இதன் அர்த்தம் அந்த வைரஸ் உலர்ந்த இரத்தத்தினூடாகப் பரப்பப்பட முடியும் என்பதாகும்.

ஹெபரைற்றிஸ் C அநேகமாக பின்வரும் வழிகளால் கடத்தப்படுகிறது:

  • ஒழுங்காகக் கிருமிநீக்கம் செய்யப்படாத மருத்துவ, பல்மருத்துவ அல்லது அறுவைச்சிகிச்சை உபகரணங்களை திரும்பவும் பயன்படுத்துதல். கனடாவில், மருத்துவ, பல்மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை உபகரணம் ஒழுங்காகக் கிருமிநீக்கம் செய்யப்பப்படுகிறது.  கனடாவுக்கு வெளியே உள்ள சில மருத்துவ வசதிகளில், இந்த உபகரணம் ஒழுங்காகக் கிருமிநீக்கம் செய்யப்படாதிருக்கலாம்.
  • ஹெபரைற்றிஸ் C ற்குப் பரிசோதனை செய்யப்படாத குருதி மாற்றீடு அல்லது உறுப்பு மாற்று சிகிச்சை பெறுதல். கனடாவில் 1990 ஆம் ஆண்டு முதல் இரத்த தானம் செய்யப்படும் குருதி ஹெபரைற்றிஸ் C ற்குப் பரிசோதனை செய்யப்படுகின்றது. சில நாடுகள்  சமீப காலம் வரையில் பரிசோதனை செய்யத் தொடங்கவில்லை.
  • மருந்துகள் தயாரித்தல் மற்றும் செலுத்துதலுக்காகப் பயன்படுத்தப்படும் ஊசிகள் மற்றும் உபகரணங்களைப் பகிர்ந்துகொள்தல் (ஊசிகள், விசைப்பீச்சு ஊசிகள், குருதித்தடுப்பு கருவிகள் அல்லது இணைப்புகள், அடுப்புகள், கரண்டிகள், வடிகட்டிகள், நீர் மற்றும் உறிஞ்சும் பஞ்சுறை உட்பட).
  • துளையிடுதல் மற்றும் பச்சை குத்திக்கொள்ளுதல் அல்லது மின்பகுப்பு அல்லது குத்தூசி மருத்துவம் ஆகியவற்றுக்கான உபகரணங்களை (ஊசிகள், மை மற்றும் மைக்குடுவைகள் உட்பட) மீண்டும் பயன்படுத்துதல்.

ஹெபரைற்றிஸ் C வேறு வழிகளில் உடலில் உள்ளே செல்ல முடியும்:

  • அவற்றில் இரத்தத்தைக் கொண்டிருக்கக்கூடிய சவர அலகுகள், நகம்வெட்டிகள் மற்றும் பற்தூரிகை போன்ற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களைப் பகிர்தல் அல்லது இரவல் வாங்குவதல். இது சமூக முடிதிருத்தும் கடைகளில் சவர அலகுகள் மீண்டும் பயன்படுத்துகிறபோது சவரம் செய்வதையும் உள்ளடக்கும்.
  • ஈரமான இரத்தம் உறிஞ்சுதல் (wet cupping) போன்ற தோலை வெட்டுதல் அல்லது துளையிடுதல் என்பவற்றை உள்ளடக்கிய பாரம்பரிய முறையில் குணப்படுத்துபவர்கள் பயன்படுத்தும் சில நடைமுறைகள்.
  • பாலியல்ரீதியாக ஹெபரைற்றிஸ்C கடத்தப் படுதல் பொதுவானதல்ல. எதிர்பாலின சேர்க்கையினூடகப் கடத்தப்படுவது மிகவும் அரிதானது மற்றும் ஆண்களிடையே பாதுகாப்பு உறையற்ற குத பாலுறவு மூலம் கடத்தப்படுவது அரிதானது. எச்ஐவி (HIV),பாலியலால் பரவிய நோய்த்தொற்றுகள்,இரத்தம் உள்ளபோது பாலுறவு மற்றும் வேதியல் சேர்க்கை(உறவை அதிகரிப்பதற்கும் நீடிப்பதற்கும் தெருமருந்துகளை பாவித்தல்) போன்ற உறுதியான காரணிகள் உள்ளபோது ஆபத்து அதிகரிக்கிறது.
  • கர்ப்பம் அல்லது பிரசவத்தின்போது ஹெபரைற்றிஸ் C  தாயிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் ஆபத்து பொதுவாகக் கனடாவில் குறைவாக உள்ளது. இருப்பினும், சுகாதார நடைமுறைகள் வேறுபட்டுள்ள மற்ற நாடுகளில் ஹெபரைற்றிஸ் C உள்ள தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளின் விடயத்தில் இது கூடுதலாக இருக்கலாம்.
Pink Needle Icon
Pink Tatoo Equipment Icon
Pink Razor Icon
Greeb Test Tube Icon

ஹெபரைற்றிஸ் C பரிசோதனை

ஹெபரைற்றிஸ் C பரிசோதனை

உங்களுக்கு ஹெபரைற்றிஸ் நோய் இருப்பது தெரியாமல் இருக்கலாம்.

உங்களுக்கு ஹெபரைற்றிஸ் C நோய் இருந்தால் பரிசோதிக்கப்படுவதுதான் அதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரே வழி. உங்களுக்கு ஹெபரைற்றிஸ் C உள்ளதா என்பதைக் காண பொதுவாக இரண்டு இரத்தப் பரிசோதனைகள் தேவை.

  1. ஹெபரைற்றிஸ் C பிறபொருளெதிரி சோதனையானது நீங்கள் எப்போதாவது வைரசுடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா என்பதைப் பரிசோதிக்கிறது.
  2. உறுதிப்படுத்தும் சோதனை வைரஸ் உங்கள் உடலில் தற்போது இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துகிறது.

எல்லா நேரங்களிலும் சோதனை எளிமையாக ஆகிக்கொண்டு வருகின்றது. உங்கள் உடல்நலப் பராமரிப்பாளரிடம் பேசி, ஹெபரைற்றிஸ் C பிறபொருளெதிரி சோதனை மட்டுமல்லாது உறுதிப்படுத்தும் சோதனை முடிவுகளைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.முதல் சில மாதங்களுக்குள் தாங்களாகவோ அல்லது ஹெபரைற்றிஸ் C சிகிச்சையின் மூலமாகவோ ஒருவர் வைரசை அழித்தாலும், எப்போதும் இரத்தத்தில் பிறபொருளெதிரிகள் இருக்கும். உறுதிப்படுத்தும் பரிசோதனையில் ஒரு நேர்மறையான முடிவு உள்ள ஒருவர் மட்டுமே ஹெபரைற்றிஸ் C வேறு ஒருவருக்குக் கடத்த முடியும்.

Purple Pill Icon
Purple Pill Icon

ஹெபரைற்றிஸ் C சிகிச்சை

ஹெபரைற்றிஸ் C குணப்படுத்தக் கூடியது! 

ஹெபரைற்றிஸ் C சிகிச்சை மிகவும் பயனுள்ளது அத்துடன் அது   கிட்டத்தட்ட அனைவரையும் குணமாக்குகிறது. பெரும்பாலான மக்களுக்கு ஹெபரைற்றிஸ் C குணமாக்கச் சிகிச்சை தேவை. ஹெபரைற்றிஸ் C சிகிச்சைகள் நேரடி-செயற்பாட்டு வைரஸ் கொல்லிகள் அல்லது DAAs என்று அழைக்கப்படுகின்றன. அவை மாத்திரை வடிவில் வருகின்றன, எடுத்துக் கொள்வதற்கு எளிதானவை, சில பக்க விளைவுகள் கொண்டவை மற்றும் சிறிது காலத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுபவை.

ஹெபரைற்றிஸ் C கொண்ட அனைவரும் அவர்களது சிகிச்சைத் தெரிவுகள் பற்றித் தங்கள் சேவை வழங்குநரிடம் பேச வேண்டும்.

ஹெபரைற்றிஸ் C சிகிச்சையின் நோக்கம்:

  • உடலில் இருந்து வைரசை அழித்தல்
  • கல்லீரல் பாதிப்பைக் குறைத்தல்
  • ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல்
  • ஹெபரைற்றிஸ் C மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுத்தல் – ஒருவர் ஹெபரைற்றிஸ்இலிருந்து குணப்படுத்தப்படுகிறார் எனில், வைரஸ் இனி உடலில் கண்டறியப்பட முடியாது  மற்றும் மற்றவர்களுக்குக் கடத்தப்பட முடியாது என்று அர்த்தமாகும்.

சிகிச்சைக்குத் தயாராகுதல்

ஹெபரைற்றிஸ் C சிகிச்சையில் பல சிகிச்சைத் தெரிவுகள் உள்ளன. ஒரு சிகிச்சைத் தெரிவைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகளில் உள்ளடங்கியவை:

  • கல்லீரல் பாதிப்பின் அளவு
  • வைரசின் செயற்திறன் அல்லது மரபணு வகை
  • அந்த நபர் முன்பே சிகிச்சை செய்யப்பட்டுள்ளாரா இல்லையா
  • அந்த நபர் ஏற்கனவே எடுக்கும் மருந்துகள்
  • பிற சுகாதார நிலைமைகள்

சிகிச்சைக்குத் தயாராகுதல் என்பதன் பொருள் உங்கள் உடல்நலப் பராமரிப்பு வழங்குநருடன் ஒரு திட்டத்தை உருவாக்குதல் மற்றும் உங்களது சிகிச்சையில் உறுதியாக இருப்பதற்கு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து உங்களுக்குத் தேவைப்படும் ஒத்துழைப்பு  உங்களுக்கு இருப்பதை உறுதிப்படுத்துதல் ஆகும். சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் சிகிச்சையின் போதும், அதற்கு முன்னரும் பின்னரும் நோயாளிகளை மதிப்பீடு செய்வர்.
சிகிச்சை ஒருவரின் கல்லீரலையும் அவர்களது வாழ்க்கையையும் பாதுகாக்க முடியும்.

ஒரு சிகிச்சை உடலில் இருந்து வைரசை அழிக்கும், ஆனால் மீண்டும் தொற்றுதற்கு எதிராகப்  பாதுகாக்காது.

நோயாளிகள் வைரசிலிருந்து குணப்படுத்தப்பட்ட பின்னர், ஹெபரைற்றிஸ் C ற்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில்லை, எனவே மீண்டும் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வைரஸ் தொடர்பு மீண்டும் வருவதைத் தவிர்க்கும் வழிமுறைகளை எடுத்துக் கொள்வது (மறுவெளிப்பாடு) நீங்கள் ஹெபரைற்றிஸ் C இல்லாமல் தொடர்ந்து வாழ்வதற்கு உதவும்.

நீங்கள் ஹெபரைற்றிஸ் C வைரசின் மீள் வெளிப்பாட்டிற்கு உட்பட்டால், ஹெபரைற்றிஸ் C க்கு நேர்மறை சோதனை செய்து திரும்பத் தொற்றிய பின்பு இந்த வைரசைத் தன்னிச்சையாக அழியவிடாமல், நீங்கள் மீண்டும் சிகிச்சைக்கு உட்பட வேண்டும்.

Orange A, B, and C Blocks Icon

ஹெபரைற்றிஸ் A, B மற்றும் C  : வேறுபாடுகள்

ஹெபரைற்றிஸ் C ,  ஹெபரைற்றிஸ் A மற்றும் B இலிருந்து வேறுபட்டது.

ஹெபரைற்றிஸ் A (Hepatitis A ) பொதுவாக மக்கள் அசுத்தமான நீர் அல்லது உணவினூடாகத் தெரியாமல் சிதைவடைந்த கழிவுப்பொருட்களை (மலம்) உட்கொள்ளும்போது பரவுகிறது. கிட்டத்தட்ட எல்லா மக்களிலும் ஹெபரைற்றிஸ் A மருந்து எடுத்துக்கொள்ளாமல் அழிக்கிறது  அத்துடன் உடல் வைரஸ் நோயெதிர்ப்புக்கு ஆளாகிறது.

ஹெபரைற்றிஸ் B(Hepatitis B ) உள்ள ஒருவரின் உடலில் இருந்து ஹெபரைற்றிஸ் B இல்லாத வேறொருவரின் உடலுக்குள் இரத்தம், விந்து அல்லது பெண் பிறப்புறுப்புச் சுரப்பு நீர் உட்புகும்போது ஹெபரைற்றிஸ் B பரப்பப் படலாம். மேலும் ஹெபரைற்றிஸ் B பிரசவத்தின் போது குழந்தைக்குக் கடத்தப்படலாம். பெரியவர்களாக உள்ளபோது ஹெபரைற்றிஸ் B பெறும் பெரும்பான்மையானவர்கள் அதைத் தாமாகவே அழிக்கிறார்கள், மேலும் அவர்களின் உடலானது நோய்த்தடுப்புக்கு ஆளாகிறது.

ஒருவர் ஹெபரைற்றிஸ் B தாமாகவே அழிக்கவில்லையென்றால், அவர்கள் ஒரு தீராத தொற்றுநோயை உருவாக்குவார்கள். நாட்பட்ட ஹெபரைற்றிஸ் B உருவாக்கும் வாய்ப்பு ஒருவர் இளம் வயதில் அதற்குப் பலியானால் அதிகமாகிறது. ஒரு நாட்பட்ட ஹெபரைற்றிஸ் B நோய்த்தொற்றுடன் கூடிய ஒருவர் ஒரு நீண்ட கால கல்லீரல் பிரச்சினைகளை உருவாக்கலாம். சிகிச்சை வைரசின் தாக்கத்தை மெதுவாக்குவதற்கும் சமாளிப்பதற்கும் உதவலாம். துரதிருஷ்டவசமாக, நாட்பட்ட ஹெபரைற்றிஸ் B நோயை  இந்தச் சந்தரப்பத்தில் குணப்படுத்த முடியாது.

ஹெபரைற்றிஸ் A மற்றும் ஹெபரைற்றிஸ் B க்கு எதிராகப் பாதுகாப்பதற்குத் தடுப்பூசிகள் உள்ளன, அவற்றை நீங்கள் பெறலாம்.

ஹெபரைற்றிஸ் C ற்கு தடுப்பூசி இல்லை, ஆனால் ஒரு சிகிச்சை உள்ளது.

Blue Question Bubble Icon

உங்களுக்கு அருகில் உள்ள ஹெபரைற்றிஸ் C சேவைகள்

உங்களுக்கு அருகில் உள்ள ஒரு ஹெபரைற்றிஸ் C சேவையைக் கண்டறியவும்.

கனடாவில் வாழும் மக்கள் தங்கள் பகுதியில் கிடைக்கக்கூடிய சேவைகளைக் கண்டறிய இந்த வலைத்தளப் பொறியைப் பயன்படுத்தலாம்: http://hcv411.ca/

ஒன்ராறியோவில், ஹெபரைற்றிஸ் (Hepatitis), எச்ஐவி(HIV) மற்றும் பாலியல் உடல்நலம் பற்றிய தகவல்களைப் பெற மக்கள் ஒன்ராறியோ பாலியல் உடல்நல  இணைப்பைத்(Sexual Health Infoline Ontario) தொடர்பு கொள்ளலாம். இது ஹிந்தி, பஞ்சாபி, உருது, டாகாலாக், மாண்டரின், கான்டோனீஸ் மற்றும் பல மொழிகளில் சேவைகளை வழங்குகிறது. நீங்கள் அழைக்கும் போது, ​​உங்களது விருப்பமான மொழியில் ஒரு ஆலோசகரிடம் பேச ஒரு குறிப்பிட்ட நேரம் உங்களுக்கு வழங்கப்படலாம். மேலும் அவர்கள் சோதனை செய்யப்படுவதற்காக ஒன்ராறியோவில் உள்ள ஒரு மருத்துவ மையத்திற்கு உங்களைப் பரிந்துரைக்கலாம்.

ஒன்ராறியோவில் உள்ள கட்டணமற்ற அழைப்பை அழையுங்கள்: 1800-686-7544
திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 10 மணி – 10:30 மணி
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை: காலை 11 மணி – மாலை 3 மணி

ஒன்ராறியோவுக்கு வெளியே உங்கள் சுகாதார வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும்.